சென்னை,
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, நாளை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் இந்த வருகையையொட்டி, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
சென்னை முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, சீரான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அந்தவகையில், வணிக வாகனங்கள், சுனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஜி.எஸ். டி.சாலையில்தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள்: தாம்பரத்திலிருந்துவரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலையை நோக்கித்திருப்பி விடப்படும்.
பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் 'இன்டர்நேஷனல் ஏர் போர்ட் சந்திப்பு (ஓட்டல் ஏர்வே) அருகே தாம்பரத்தை நோக்கித் திருப்பி விடப்படும்.
ஜே.என். 100 அடி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்:
கோயம்பேட்டிலிருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் 2-வது அவென்யூவில் கோயம்பேடு அல்லது கே.கே.நகர் நோக்கி திருப்பி விடப்படும்.
அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கி திருப்பி விடப்படும்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து கத்தி பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்: மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கி திருப்பி விடப்படும்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். சர்தார் படேல் சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:
ஓஎம்ஆர் மற்றும் சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் சிபிடி நோக்கி திருப்பிவிடப்படும்.
காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங் கள், காந்திமண்டபம் சந்திப்பில் சிபிடி நோக்கி திருப்பி விடப்படும்.
வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் படேல்சாலை நோக்கி வரும் வாகனங்கள்:
வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், குருநானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கி திருப்பி விடப்படும்.
அண்ணா சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:
அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்சி ராஜா யூடர்ன் பகுதியில் அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்பட்டு, தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக் கப்படும்.
மேற்குறிய காலகட்டத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பாதைகளை பின்பற்றுமாறும், அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.