சென்னை,
பி.எம். ஸ்ரீ திட்டம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழக முதல்-அமைச்சர் விஜய், முதலில் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருக்கட்டும், பி.எம். ஸ்ரீ திட்டமாக இருக்கட்டும், லட்சக்கணக்கான கல்வியாளர்கள் கருத்துகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கல்வி முன்னேற்றத் திட்டங்களே. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மாநிலங்களில் எல்லாம் கல்வி சிறப்பாக உள்ளது.
சென்ற ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்காததற்கு காரணம், இதுபோன்ற நல்ல திட்டங்களை அரசியல் ரீதியாக எதிர்த்ததுதான். இங்கே தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார்.
ஆனால் இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள்.
ஆகையால், இதுபோல் புதிய அமைச்சர்கள் எந்தக் கொள்கையையும் தீவிரமாக விசாரிக்காமல், ஆழமாக கலந்தாலோசிக்காமல் கருத்து சொல்வது மேம்போக்காக துறையை எடுத்துச் செல்வதற்கே வழிவகுக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.