தமிழக செய்திகள்

பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது: அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்

பி.எம்.எப்.எம்.இ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

பிரதான் மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தினை (PMFME) தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய உணவுப்பதப்படுத்துதல், தொழில் துறை மந்திரி சிராக் பஸ்வானிடம் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா விருதினை பெற்றுக்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

புதுடெல்லி, இந்தியா ஹாபிடாட் சென்டரில் 24.08.2026 & 25.08.2026 அன்று நடைபெற்ற பிரதம மந்திரி குறு உணவுபதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme) தொடர்பான விருது வழங்கும் விழாவில், PMFME திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, பெரிய மாநிலங்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய உணவுபதப்படுத்துதல் தொழில்துறை மந்திரி சிராக் பஸ்வான் விருதினை வழங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா பெற்றுக்கொண்டார்.

பிரதான் மந்திரி குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு மத்திய நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டத்தில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு முறை பின்பற்றப்படுகிறது. முறைசாரா குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதையும், விவசாய விளைப்பொருட்களின் மதிப்பு கூட்டுதலை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்தது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் மற்றும் முதன்மைச் செயலர் /தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் உமாநாத் மற்றும் மத்திய, மாநில அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் PMFME திட்டம் நடப்பு நிதியாண்டில் உணவுப்பதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும் 1,618 நிறுவனங்களுக்கு ரூ.47 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பதப்படுத்தல் நடவடிக்கைகளில் மகளிரை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் விதை மூலதன மானியமாக 9,569 பெண்களுக்கு மொத்தம் ரூ.38.16 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

PMFME திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா முழுமைக்குமான இலக்கில் சுமார் 10 சதவீத பங்களிப்பாகும். மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட அலகுகளில் நிதி விடுவிக்கப்பட்ட விகிதத்தில் (sanction-to-disbursement rate) 92% என்ற சிறப்பான அளவுகோலையும் தமிழ்நாடு மாநிலம் எட்டியுள்ளது.

தமிழ்நாடு 6 பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இது உணவுப்பதப்படுத்தல் அமைச்சகத்தால் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான முன்மொழிவுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.