தமிழக செய்திகள்

அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே முக்கிய காரணம் - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி பாமக என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டு அரசியலின் வழித்திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உரிமைக்குரலாகவும் விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ம் தேதி 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் நமது நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் அய்யா ராமதாசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அவர் வகுத்துக் கொடுத்தப் பாதையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஓர் அரசியல் இயக்கத்தின் வெற்றி ஆட்சியைப் பிடிப்பது மட்டும் தானா என்றால் இல்லை. அதிகாரத்திற்கு வராமலேயே அரசு இயந்திரத்தையும், அதிகார மையத்தையும் இயங்கச் செய்வது தான் ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான வெற்றி. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

அடித்தட்டு மக்களில் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சிக்கல்களை பாட்டாளி மக்கள் கட்சி பேசினால், அதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவது இதற்கு சான்று ஆகும். இந்தியாவின் அரசியல் என்பது 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த காலத்தில் தொடங்குகிறது. அதற்கு வயது குறைந்தபட்சம் 500 ஆண்டுகள். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் 78 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது.

இந்த காலகட்டங்களில் நாடு முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் பயனடையும் வகையில் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்த ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளிகளுக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 37 ஆண்டுகளில் தமிழக மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வேளாண்மை, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இயக்கங்களாலும், பணிகளாலும் தமிழ்நாட்டில் பயனடையாத குடும்பங்களே இருக்க முடியாது என்பதை நினைத்து நாம் அனைவரும் பெருமிதப்படலாம். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை பாராட்டியிருக்கலாம்; விமர்சித்திருக்கலாம்; ஆனால், மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகளை எந்தவொரு இயக்கத்தாலும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், உறுதியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி இன்றளவும் நிலைத்திருப்பதற்கு காரணம் நமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். 2026 சட்டசபை தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பினோம். நான் பரப்புரைக்கு சென்ற இடங்களில் எல்லாம் கிடைத்த மக்களின் அமோக ஆதரவு நமது நம்பிக்கையை உறுதி செய்தது. ஆனால், எவருமே எதிர்பாராத அலை வீசியதால் தேர்தல் முடிவுகள் மாறின.

ஆனாலும் கூட நாம் மலை போல வலுவாக உள்ள பகுதிகளில் அந்த அலையால் எதுவும் செய்ய முடியவில்லை. 35-க்கும் மேற்பட்ட இடங்களில் நமது கூட்டணி கட்சி வெற்றி பெற நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நாம் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும் இன்றைய சூழலில் நாம் பெற்ற அந்த 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமமானது என்பதை பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் ஓய்வெடுக்கவில்லை. நமது மக்கள் பணி முன்பை விட வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பது நமது 46 ஆண்டு கால கோரிக்கை ஆகும். கடந்த கால ஆட்சியாளர்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத நிலையில் இன்றைய ஆட்சியாளர்களிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று கவர்னர் உரை மூலம் அறிவிக்கச் செய்திருக்கிறோம். இதை விட மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கக் கூடிய நற்செய்தி நமக்கு இருக்க முடியுமா?.

நமது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?. ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே மருத்துவர் ராமதாசின் கனவு; அது தான் நம் அனைவரின் நோக்கம். மருத்துவர் அய்யா ராமதாசின் கனவை நனவாக்கும் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டின் அரசியலிலும், சமூகநீதியிலும் மேலும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அனைத்துக் கிளைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் அளிக்கும் நிகழ்வுகளில் உங்களை சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.