தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு ஏப்ரல் 16 வரை காவல் நீட்டிப்பு: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் கைதான தர்மமுனீஸ்வரனின் காவல் காலம் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையின் பலனாக, இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, 20 நாட்களிலேயே நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

தர்மமுனீஸ்வரனின் காவல் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் காணொலிக் காட்சி மூலம் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, தர்மமுனீஸ்வரனுக்கு வருகிற ஏப்ரல் 16-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி அதிரடி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.