தமிழக செய்திகள்

ஞானபீட விருது வழங்க மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வைரமுத்து - செல்வப்பெருந்தகை வாழ்த்து

வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கே பெருமை அளிக்கும் செய்தி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ் மொழியின் செழுமையையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் கவிதைகளாலும் பாடல்களாலும் உலகிற்கு எடுத்துச் சென்ற கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு உயரிய ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கே பெருமை அளிக்கும் செய்தியாகும். ஞானபீட விருது வழங்க மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வைரமுத்து.

இலக்கியத்திலும், திரைப்படப் பாடல்களிலும் தனித்துவமான முயற்சியால் தலைமுறைகளைத் தொட்டவர் கவிஞர் வைரமுத்து. அவரது படைப்புகள் தமிழ் மொழியின் இனிமையையும் சிந்தனையின் வளத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த உயரிய விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்துக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல சிறந்த படைப்புகளை உருவாக்கி தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.