தமிழக செய்திகள்

தமிழரசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காவல்துறை தடை - பழ.நெடுமாறன் கண்டனம்

39 ஆண்டு காலமாக நடந்து வரும் அநீதிக்கு முதல்-அமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்த் தேசியப் போராளியும், காவல்துறையினால் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டவருமான தோழர் தமிழரசனின் 39-வது நினைவு நாளில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதகளிர் மாணிக்கம் என்னும் சிற்றூரில் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் அவருடைய கல்லறை அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே அவருடைய தங்கை அன்பழகியின் வீடு உள்ளது.

அந்த வீட்டில் நடைபெற்ற தமிழரசனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நானும், தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுபா.இளவரசன், தமிழர் தேசிய முன்னணியின் அரியலூர் மாவட்டத் தலைவர் புலவர் அரங்கநாடன் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் மகளிர் உட்பட பல வாகனங்களில் அந்த ஊரை நோக்கி செப்டம்பர் முதல் நாள் மாலையில் சென்றோம். எங்களைப் போல பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் அவ்வூரை நோக்கித் திரண்டு வந்தனர்.

உயிர்த் தியாகம் செய்தவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதும், நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதும் அடிப்படையான மனிதஉரிமையாகும். ஆனால், அந்த ஊருக்குள்ளேயே யாரையும் நுழையவிடாது தடுத்து நிறுத்தியதோடு, ஏராளமான காவல்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.

இதற்கிடையில் அவ்வூரை நோக்கிச் சென்ற எங்களை திருமுட்டத்திலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்த ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் சில மணிநேரம் வைத்திருந்து பிறகு இரவு 8 மணிக்கு எங்களை விடுதலை செய்தனர். எங்கள் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 39 ஆண்டு காலமாக தமிழரசனின் கல்லறைக்கு யாரும் செல்லவிடாமல் காவல்துறை இன்றளவும் தடுத்து வருவது அப்பட்டமான மனிதஉரிமை மீறலாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா.இளவரசனை பொய்க் குற்றச்சாட்டின்கீழ் காவல்துறை இன்று மீண்டும் கைது செய்திருப்பது அவர் மீது வஞ்சம் தீர்க்கும் அப்பட்டமான அநீதியாகும். அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்.

தமிழரசனின் கல்லறைக்கு யாரும் சென்று அஞ்சல் செலுத்தவிடாமல் 39 ஆண்டு காலமாக காவல்துறை தடுத்து வரும் இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மறைந்த தமிழரசனின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க முன்வருமாறு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT