சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் 2-வது இடத்தையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களு டன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. அக்கட்சி மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற பேச்சு எழுந்த நிலையில், அ.தி.மு.க.வில் இரு வேறு கருத்து நிலவியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.
சி.வி.சண்முகம். எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்கள் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்றும், கட்சி யின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
மேலும் சட்டசபை அ.தி.மு.க. குழு தலைவராக வேலுமணியையும் தேர்வு செய்தனர். இதனி டையே எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அவரது தரப்பினர். தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தை சி.வி.சண்முகம் தரப்பினரும் கொடுத்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததாக கருதப்பட்டது.
நேற்று சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு அதிமுகதொண்டர்கள் வரவேற்பு தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்தநிலையில், அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.