எஸ்டிபிஐ கட்சி  
தமிழக செய்திகள்

முத்துப்பேட்டையில் முஸ்லிம் மக்களை பயோமெட்ரிக் எடுக்க கட்டாயப்படுத்திய போலீஸ் ; எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சரித்திரப் பதிவேடு இருப்பதாக கூறி, பயோமெட்ரிக் பதிவுகளுக்காக காவல் நிலையம் வருமாறு முத்துப்பேட்டை காவல் துறையினர் தப்ரே ஆலம் பாதுஷாவை வற்புறுத்தியுள்ளனர்.

சென்னை,

முத்துப்பேட்டையில் எஸ்டிபிஐ தஞ்சை மண்டல தலைவர் உள்ளிட்ட முஸ்லிம் சமூக மக்களை பயோமெட்ரிக் பதிவு செய்ய வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பயோமெட்ரிக் பதிவு

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மண்டல தலைவராக மக்கள் பணி செய்துவரும் தப்ரே ஆலம் பாதுஷா மீது எவ்வித நிலுவை வழக்குகளோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளோ இல்லாத சூழலில், அவர் மீது சரித்திரப் பதிவேடு இருப்பதாக கூறி, பயோமெட்ரிக் பதிவுகளுக்காக காவல் நிலையம் வருமாறு முத்துப்பேட்டை காவல் துறையினர் அவரை வற்புறுத்தியுள்ளனர்.

கண்டனத்திற்குரியது

இதுதொடர்பாக தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் இன்று காலை சென்றபோது, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மற்றொரு காவலர் ஆகியோர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து, உரிய சட்டப்பூர்வமான அழைப்பாணை இன்றி, அவரை சட்டவிரோதமாகப் பலவந்தமாக அழைத்து சென்றுள்ளனர். சட்ட விதிகளுக்கு புறம்பான இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய குடிமகன்

எவ்வித சட்டப்பூர்வமான காரணமோ அல்லது உரிய நீதிமன்ற உத்தரவோ இல்லாத நிலையில், இந்தியக் குடிமகனின் நடமாடும் சுதந்திரத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையில், முறையான அழைப்பாணை இன்றி ஒருவரை கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது வெளிப்படையான சட்டவிரோத காவலில் அடங்கும்.

போராட்டம்

மேலும், வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட தப்ரே ஆலம் பாதுஷாவை முறைப்படி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் வேறு இடங்களுக்கு அழைத்து சென்றது காவல்துறையின் சந்தேகத்திற்குரிய மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறையை காட்டுகிறது. எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடனடியாக காவல் நிலையம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, வேறு வழியின்றி அவரை இறக்கிவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். முத்துப்பேட்டை காவல்துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தப்ரே ஆலம் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த பல சிறுபான்மை முஸ்லிம்களையும் தொடர்புகொண்டு இத்தகைய நடவடிக்கைகளை முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறலாகும்

சமீபகாலமாக தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக மேலப்பாளையம், முத்துப்பேட்டை உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை குறிவைத்து இத்தகைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட சிறிய வழக்குகளை காரணம் காட்டி, தற்போதைய சூழலில் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவர்களை குறிவைத்து கண் ரேகை மற்றும் கைரேகைகளை பதிவு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது குடிமக்களின் சுயமரியாதையையும், கண்ணியமான வாழ்வுரிமையையும் குலைக்கும் செயலாகும்.

வேதனையளிக்கிறது

ஏற்கனவே மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி எஸ்டிபிஐ கட்சி வலுமான மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சரித்திர பதிவேடு

சரித்திரப் பதிவேடு' என்ற பெயரை கூறிக்கொண்டு, அப்பட்டியலில் இல்லாத நபர்களிடமும் பயோமெட்ரிக் பதிவுகளை கோருவதும், குற்றங்களை கண்காணிப்பதாக கூறுவதும் அரசியல் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் அச்சுறுத்துவதற்காக ஏவப்படும் கேடயமாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நம்பிக்கை

சிறுபான்மை மக்களை தொடர்ச்சியாக சந்தேக கண்ணோடு பார்ப்பதும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதும் ஜனநாயக நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் பேராபத்தை விளைவிக்கும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், சில காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய ஒருதலைப்பட்சமான அதிகார துஷ்பிரயோகம் மாநில அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதோடு, காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் தகர்க்கிறது.

முதல்-அமைச்சர்

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, சிறுபான்மை சமூக மக்களை அச்சுறுத்தும் வகையில் சரித்திரப் பதிவேடு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான பயோமெட்ரிக் பதிவு நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், சட்டத்திற்கு புறம்பாகவும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமலும் பொதுமக்களிடம் அச்சத்தை விதைத்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT