தமிழக செய்திகள்

விருதுநகர் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

தமிழகத்தையே உலுக்கிய இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று ஏற்பட்ட பட்டாசு வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் அங்கிருந்த அறைகள் சிதறின. பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனுமதியுடன் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.