சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கியது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டுக்கு வந்த அனைவரையும் தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்று பேசினார்.அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பரமரிப்பது குறித்தும், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருளை ஒழிப்பது சம்பந்தமாகவும் விரிவாக பேசினார். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் பேசினார்கள்.
இந்த மாநாட்டை 3 அமர்வுகளாக நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் அமர்வில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொண்ட னர். இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு, பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் போலீஸ் நிர்வாகத்தின் செயல்பாடுகள் அவர்களின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் குற்றத்தில் ஈடுபடுவோரை கைது செய்வது, ரவுடிகள் செயல்பாட்டை கண்காணித்தல், ஜாமீனில் உள்ளவர்களை கண்காணித்தல், உளவுத்துறையின் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.
சிங்கப் பெண் அதிரடிப் படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள் பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற நிலையை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கள்ளச் சாராயத்தை கடுமையாக ஒழிப்பது, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை உள்பட பல்வேறு சட்டம்-ஒழுங்கு நிலவரம் பற்றியும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாநாட்டில் காவல்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதல் அமைச்சர் விஜய் விடுத்துள்ளார். முதல் அமைச்சர் விஜய் கூறுகையில்,பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுமக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்று இனி நடைபெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தவெகவினர் உட்பட அரசியல் தலையீடின்றி காவல் துறை செயல்பட வேண்டும். அரசு திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.