தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சமையல் மாஸ்டரை கட்டையால் அடித்து கொன்ற அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 2-வது கைலாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராமன்(எ) ராபின். இவரது மகன்களான இஸ்ரவேல் (வயது 50) மற்றும் சாமுவேல்(45) ஆகிய 2 பேரும் சமையல் மாஸ்டர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்பதால், இவர்களது மனைவிகள் அவர்களைப் பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த இஸ்ரவேல் மற்றும் சாமுவேல் ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இஸ்ரவேல், சாமுவேலை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட இஸ்ரவேல், வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, சாமுவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இஸ்ரவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.