தமிழக செய்திகள்

இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய 2 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி செட்டியாபத்து அருகேயுள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (தொழிலாளி). இவரது மனைவி சாந்தி (வயது 31). இவர் நேற்று இரவு நேரம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து செல்வபுரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென சாந்தியை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த 2 பேர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சாந்தியை சரமாரியாக வெட்டிவிட்டு, பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

தீவிர சிகிச்சை

இதில் பலத்த காயமடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி சாலையில் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT