தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம், தங்க நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு வீட்டின் கதவை பூட்டிவிட்டு காலையில் வெளியே சென்று, மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 43). தொழிலாளியான இவர் நேற்று காலை தனது குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

மாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், தங்கக் கம்மல் மற்றும் மோதிரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர் மற்றும் ஐசக் ஆகியோர் முன்னிலையில் கைரேகைப் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்தத் திருட்டு குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.