தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் 1 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த பெரியசாமி மனைவி பார்வதி (வயது 75). நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி பார்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு பெண், திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் மூதாட்டியிடம், "நான் அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுத் தருவதற்காக விபரங்களை எழுதி வாங்க வந்துள்ளேன்" என்று கூறி பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு வாங்கி குடித்துவிட்டு, தொடர்ந்து மூதாட்டியிடம் நயமாகப் பேசியுள்ளார்.
அப்போது அந்த பெண், "தற்போது அரசு அதிகாரி ஒருவர் சரிபார்ப்பதற்காக வெளியே வருகிறார்; நீங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் வசதியானவர் என்று நினைத்து அரசுப் பணம் வழங்க மறுத்துவிடுவார். எனவே செயினை கழற்றி பத்திரமாக வையுங்கள்" என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி, தன் கழுத்தில் இருந்த 1 சவரன் தங்கச் செயினை கழற்றியுள்ளார். உடனே அந்தப் பெண், "என்னிடம் தாருங்கள், நான் பத்திரமாக தருகிறேன்" எனக் கூறி தங்க செயினை தன் கையில் வாங்கிக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து, "அதிகாரி வெளியே பேருந்து நிறுத்தம் அருகில் நிற்கிறார், அங்கே செல்லலாம்" என மூதாட்டியை நயமாக அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வரை வந்துள்ளார். அங்கு வந்தவுடன் அந்தப் பெண் திடீரென வந்த ஒரு பேருந்தில் ஏறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன் தங்கச் செயினை திருப்பித் தருமாறு கேட்டபோது, "நான் நாளைக்கு உங்களது வீட்டிற்கே நேரில் வந்து தந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு பேருந்தில் அந்த பெண் தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி பார்வதி, வீட்டிற்கு வந்த தன் மகன் பூபதியிடம் தங்கச் செயின் பறிப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பூபதி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து நிறுத்தப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம பெண்ணை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.