கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கணவர் செலவுக்கு பணம் அனுப்பாமல் கொடுமைப்படுத்துவதாக கூறி கடந்த 2022-ம் ஆண்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்த சாம்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த பெண் கணவரை விட்டு பிரிந்தார். இதையடுத்து சாம்சன் தனக்கு திருமணமானதை மறைத்து அவரிடம் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தார். அத்துடன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமாகி பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் சாம்சனுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. அத்துடன் சாம்சன் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்தார்.
இதுகுறித்து அந்த பெண் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சாம்சன் மீது மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே சாம்சன் தலைமறைவானார். இந்தநிலையில் ஏட்டு சாம்சனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவிட்டார்.