தமிழக செய்திகள்

கோவையில் குட்கா, கள்ளச்சந்தை மது விற்பனையை தடுக்க 228 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

இதுதொடர்பாக 40 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 2-வது நாளாக இன்று மாவட்டம் முழுவதும் 228 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று மாவட்டம் முழுவதும் 213 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 40 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

2-வது நாளாக சோதனை

இந்த நிலையில், இன்று 2-வது நாளாக அதிகாலை முதல் கோவை மாவட்டத்தில் 228 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கல்லூரிகளில் தங்கி படிப்பை பாதியில் நிறுத்திய முன்னாள் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்துக்குரிய கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த அதிரடி சோதனையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 480 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், செட்டிபாளையம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள வாலிபர்களின் அறைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT