கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்க வளையலை தவறவிட்ட பெண் பயணி - போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி தவறவிட்ட தங்க வளையலை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

சென்னை,

செங்கோட்டையில் இருந்து தென்காசி வழியாக எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை தாம்பரம் ரெயில் நிலையம் வந்தது. இதில் முன்பதிவு பெட்டியில் பயணித்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாரு பிரபா என்ற பெண் பயணி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கினார்.

பின்னர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்ற ரெயில் அங்கிருந்து பராமரிப்பு பணிக்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, தாம்பரத்தில் இறங்கிய சாரு பிரபா வைத்திருந்த வைர கற்கள் பதிந்த தங்க வளையல் காணாமல் போனது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இதையடுத்து, அவர் எழும்பூர் ரெயில் நிலையம் சென்று ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தார். ரெயில்வே பாதுகாப்பு படையினர் பணிமனைக்கு சென்ற ரெயிலில் சோதனை செய்து தங்க வளையலை மீட்டனர். பின்னர், தங்க வளையலை ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் கொண்டு வந்து உரிய அடையாளங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு சாரு பிரபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன தங்க வளையலை பத்திரமாக மீட்டு கொடுத்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அவர் நன்றியை தெரிவித்தார்.