கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள்விக்னேஷ். ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த இவர், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு கடந்த ஜூலை மாதம் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கலெக்டர் புகார் கொடுத்தார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷனாஸ், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 23-ந் தேதி முறைப்படி புகார் பெறப்பட்டு, அருள் விக்னேஷ் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக நவம்பர் 24-ந் தேதி ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ்சை நியமித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அவரது விசாரணையை காவல்துறை நிர்வாகப்பிரிவு ஐஜி என்.காமினி கண்காணிக்கவும் உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று (நவம்பர் 25-ந் தேதி) ஸ்ருஷ்டி சிங் தமது விசாரணையை தொடங்கினார். அருள் விக்னேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். காவல்துறை விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் காலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எஸ்பி சிருஷ்டி சிங் தீவிர விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, புகார் அளித்த மாவட்டப் பெண் அதிகாரியின் இல்லத்திற்கு முதன்முறையாக நேரில் சென்று சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பெற்றார். அதன் பின்னர், அந்தப் பெண் அதிகாரி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் தொடர்புடைய அதிகாரிகள் தனித்தனியாக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
நாளை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எம்எல்ஏ தரப்பில் வழக்கறிஞரை நியமித்துத் தங்களது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்பதற்காக மட்டுமே காவல்துறை சார்பில் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராகக் கோரி எம்எல்ஏவுக்கு இதுவரை சம்மன் வழங்கப்படவில்லை என்றும், அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் வீட்டின் முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.