தமிழக செய்திகள்

‘ஆளுங்கட்சியின் ஐ.டி. விங் போல காவல்துறை செயல்படக் கூடாது’ - கனிமொழி எம்.பி.

த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் காவல்துறைகூறியதாவது;-

காவல்துறை

“த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும்போது, ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பேசுவதும், அரசியல் தலைவர்களுக்குப் பதிலளிப்பதும் காவல்துறையின் பணியாக மாறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சட்டம் ஒழுங்கை காக்கவேண்டிய காவல்துறை தனது கடமைகளை சரிவர செய்ய வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியின் ஐ.டி. விங் போல செயல்படக்கூடாது.

ஆர்ப்பாட்டம்

இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மகளிர் அணியின் சார்பில் வரும் 31 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தற்போது விலைவாசி உயர்ந்து வரும் சூழலில், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருட்களின் விலையை மட்டுமாவது கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதையும் இந்த அரசு செய்யவில்லை. இந்த ஆட்சியில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களின் விலையைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவுகிறது என்பதுதான் உண்மை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT