நாமக்கல்,
நில பிரச்சினை வழக்கை சாதகமாக முடிக்க விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியராஜ், விவசாயி. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமி என்பவருக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விவசாயி சவுமியராஜுக்கு சாதகமாக முடித்து தருவதற்கும், மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் நல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரன் (53) என்பவர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சவுமியராஜ் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, சவுமியராஜ் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனிடம் அந்த பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கெங்காதரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். காவல் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.