தமிழக செய்திகள்

காவல் நிலையங்கள் சித்ரவதைக் கூடங்கள் அல்ல..! - வானதி சீனிவாசன்

காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காவல் நிலைய மரணம்

நாகர்கோவிலில் சபரிவர்மன் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக நாகர்கோவில் மாவட்டச் சிறையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல உடல்நலத்துடன் இருந்த இளைஞர் சபரிவர்மன் சிறையில் மர்மமான உயிரிழந்திருப்பது மீண்டும் ஓர் அஜித்குமார் சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் நீதிபதியின் முன் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காவல் நிலையங்களும், சிறைகளும் கைதிகளை நன்னெறிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கினை சரி செய்யவும் தானே தவிர இதுபோன்ற அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்யும் சித்ரவதைக் கூடங்கள் அல்ல. சாத்தான்குளம், திருப்புவனம் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது நாகர்கோவிலிலும் காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கடுமையான நடவடிக்கை

இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரும் வகையில் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.