தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம்: போலீசார் அதிரடி

தூத்துக்குடியில் ஒரே நாளில் பேருந்து, கார், லாரி, மினி சரக்கு வாகனம் என அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த மொத்தம் 38 ஸ்ட்ரோப் விளக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) தற்போது தனியார் வாகனங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளக்குகள் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆகிய வாகனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் தங்களது வாகனங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

மேலும் தனியார் வாகனங்கள் இந்த சிவப்பு-நீல நிற விளக்குகளை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அவசர ஊர்திக்கு வழி விடும் சூழ்நிலையை குழப்பம் அடைய செய்வதுடன், அவசர ஊர்திகளுக்கான மதிப்பை பொதுமக்கள் மத்தியில் குறையச் செய்கிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு நேற்று ஒரே நாளில் பேருந்து, கார், லாரி, மினி சரக்கு வாகனம் என அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த மொத்தம் 38 ஸ்ட்ரோப் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இதுபோன்ற சிவப்பு-நீல நிற விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவற்றை தாங்களாகவே நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT