போலீஸ்காரர் 
தமிழக செய்திகள்

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது

பயந்துபோன காவலர் மணிவேந்தன், பேருந்து ஈச்சனேரி அருகே வந்தபோது உடனடியாக கீழே இறங்கினார்.

கோவை,

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் (32) என்பவரை போலீஸ்காரர் கைது செய்துள்ளனர்.

பேருந்தில் அட்டூழியம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்தார். அதே பேருந்தில் கோவை போத்தனூர் குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வரும் மணிவேந்தன் என்பவரும் வந்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மணிவேந்தன் அந்த கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பேருந்துக்குள்ளேயே கூச்சலிட்டார்.

மன்னிப்பு

மாணவி கூச்சலிட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் திரண்டனர். இதனால் பயந்துபோன காவலர் மணிவேந்தன், பேருந்து ஈச்சனேரி அருகே வந்தபோது உடனடியாக கீழே இறங்கினார். மேலும், தான் செய்த தவறுக்காக அந்த மாணவியிடம் அங்கேயே மன்னிப்பும் கேட்டுள்ளார்.

போலீஸ்காரர் கைது

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி இந்த சம்பவம் குறித்து பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகாரை அடுத்து, போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை கைது செய்தனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.