சென்னை,
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.
போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது. போலியோ ஒழிப்புக்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்வில், முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கசாவடிகள், சோதனை சாவடிகள், விமானநிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலமாக தொலை தூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்காக நாளையும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.