தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியுள்ளது.

சென்னை,

இந்தியாவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது.

தமிழகஅரசின் தீவிர முயற்சி காரணமாக 2004-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று இந்தியா முழுவதும் நடக்கிறது.

இதன்படி, தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. சென்னையில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று அந்தந்த மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கு முன் எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.