தமிழக செய்திகள்

15-ம் தேதி ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் அரசியல் மையம் தொடக்கம்

இந்த அரசியல் மையத்தின் வாயிலாக, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினருக்கு திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சென்னை.

அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம் வரும் 15ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ‘வி த லீடர்ஸ்' என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் கோவையை மையமாக கொண்டு கொங்கு மண்டலத்தில் தன் அமைப்பை பலப்படுத்தி வரும் அவர் கோவையில், நீலாம்பூர் பகுதியில் ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம்’ கட்டி வருகிறார். இந்த மையத்தின் வாயிலாக, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினருக்கு திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் சமூக ஊடக பிரிவு பொதுச்செயலர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறுகையில், “அரசியலமைப்பு, ஜனநாயகம், ஆட்சி நிர்வாகம், உள்ளாட்சி, தலைமை பண்பு குறித்து, அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பொது இயக்கம் என்பது, தேர்தல் அரசியலுடன் முடிவதில்லை. பொதுப்பிரச்னைகளை அடையாளம் கண்டு, மக்களை ஒருங்கிணைத்து, தீர்வு காண வேண்டும். அதற்காக தான், இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி, இந்த மையத்தை, அண்ணாமலை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக, 100 பேருக்கு இரண்டு நாள் பயிற்சியும், பின், அவர்களுக்கு 100 நாள் களப்பயிற்சியும் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT