சென்னை,
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சென்னை செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மதுபோதையைவிட மிக மோசமான, சீரழிந்த அரசியல் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரக்கூடிய சூழல் நிலவுவதால், அதற்குத் திமுகவினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் நேரங்களில் அரசியல் கூட்டணிகள் மாறுவது பொதுவான ஒன்றுதான் என்றாலும், தேர்தல் முடிந்து ஒரு குறிப்பிட்ட அணியில் வெற்றி பெற்ற பிறகு, சுயநலத்திற்காக மற்றொரு அணிக்கு மாறுவதும், மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பதுமான மலிவான அரசியல் செயல்கள் தற்போது தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக, இதுவரை ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரக்கூடிய அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தற்போதைய 6 நிற்குமா, அல்லது எதிர்காலத்தில் 16, 60, ஏன் 100 தொகுதிகள் வரை அதிகரிக்குமா என்று கணிக்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தினமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவி வரும் நிலையில், மேலும் 6 முதல் 10 உறுப்பினர்கள் வரை கட்சி மாறத் தயாராக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவில் மிகச்சிறந்த நாகரீகமான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த தமிழ்நாடு, இன்று அண்டை மாநிலங்களாலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் ஒரு கேலிக்கூத்தாக பார்க்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலமாகத் தங்கள் பக்கம் இழுக்கும் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல்கள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு மாதங்களுக்குள்ளேயே, சுயநலத்திற்காகத் தங்களின் கொள்கைகளையும் கட்சிகளையும் மாற்றுவது என்பது தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இத்தகைய தவறுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் செய்ய கூடாது.
அதேபோல், தங்களின் சுய தேவைக்காக மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் செயல்களில் அரசியல் கட்சிகளும் ஈடுபட கூடாது. அரசியலில் 'கரணம் தப்பினால் மரணம்' என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறுகிய அரசியல் லாபங்களுக்காக பதவிகளை ராஜினாமா செய்வதும், அதன் மூலம் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தலை திணிப்பதும் தவறான அரசியல் முன்னுதாரணங்களுக்கே வழிவகுக்கும்.
கட்சித்தாவல் தடைச்சட்டத்தைக்கூட மறுபரிசீலனை செய்யவேண்டும். தவெக அமைச்சர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது தவறான உதாரணம். அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்.