தமிழக செய்திகள்

அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த செயலி மூலம் அனுமதி பெறவேண்டும் - சென்னை மாநகராட்சி தகவல்

நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக இத்தகைய விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு Suvidha என்ற செயலி மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், தகவல்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்ட பிராசாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு Suvidha என்ற செயலி மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (Returning Officers) விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இத்தகைய விண்ணப்பங்கள் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும்.

வீடுவீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளுதல் (Door to door Canvass), ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபாட் (Helicopter and Helipad) பயன்பாடு, தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் (Temporary Party Office), ஒலிபெருக்கியுடன் கூட்டம் நடத்துதல் (Hold Meeting and Loud Speaker), ஒலிபெருக்கியின்றி கூட்டம் நடத்துதல் (Hold Meeting without Loud Speaker), ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம் நடத்துதல் (Street Corner Meeting and Loud Speaker), ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துதல் (Take out Procession and Loud Speaker), பேரணி நடத்துதல் (Rally), சாலைக் காட்சி (Road Show) மேற்கொள்ளுதல், விளம்பரப் பதாகைகள் மற்றும் கொடிகள் (Display Banner and Flags), சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் மற்றும் கம்பத்துடன் கூடிய விளம்பரப் பலகைகள் (Poster, Hoarding and Unipole), வாகனங்கள் அனுமதி (Vehicle Permission), உள் மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதி (Vehicle Permit (intra District)), ஒலிபெருக்கியுடன் வாகன அனுமதி (Vehicle with Loudspeaker Permit), நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு வாகன அனுமதி (Star campaigners and Party office bearers) உள்ளிட்டவற்றிற்கு Suvidha செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளரால் ஏற்ற இடங்களாக தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு 112 இடங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு 179 இடங்கள் என 291 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதர இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதி வழங்கப்படும் இடங்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெறப்படும் இத்தகைய விண்ணப்பங்கள் காவல்துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுக்கு கருத்து மற்றும் தடையில்லாச் சான்றுக்காக அனுப்பப்படும்.

மேற்குறிப்பிட்ட துறைகளின் கருத்துக்கள் மற்றும் தடையின்மைச் சான்றுகளின் அடிப்படையில், தேர்தல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட துறைகளிடம் இருந்து தடையின்மைச் சான்று கிடைக்காத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதற்கான காரணங்களும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்படும்.

இந்த Suvidha செயலி மூலம் இதுவரை 816 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 408 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 274 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

எனவே, தேர்தல் விதிகளின்படி Suvidha செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை அளித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.