சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) தமிழக வெற்றிக்கழகம் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார். ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவித்தது. எனினும், விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வரும்படி கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. அப்படி பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவித்தன.
இந்த சூழலில், த.வெ.க. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. எனினும் அக்கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன? என்பது பற்றி காண்போம்.
01. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பெரும்பான்மை கட்சிக்கு ஆதரவாக வாக்கு செலுத்துவார்கள்.
02. பட்ஜெட், முக்கிய சட்டங்கள் போன்றவற்றில் தங்களுக்கு உடன்பாடு இருந்தால் மட்டும் ஆதரவு தருவார்கள். ஆதரவு தர வேண்டும் என்ற கட்டாயமில்லை.
03. அமைச்சரவையில் இடம் பெற மாட்டார்கள்.
04. அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பொறுபேற்க வேண்டிய அவசியம் இல்லை.
05. ஆதரவு தெரிவித்தாலும் எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்.
06. எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெற முடியும்.