தமிழக செய்திகள்

பள்ளி விழா மேடையில் அரசியல் பேச்சு; அமைச்சர் வன்னி அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

பள்ளி மேடையிலேயே பாஜகவை வாய்க்கு வந்தபடி அமைச்சர் வன்னி அரசு வசைபாடியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் நீங்கள் கலந்து கொண்ட பள்ளி விழாவில் “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என NCC மாணவர்கள் உங்களுக்கு வரவேற்பளித்ததை, “ஜெய் ஸ்ரீராம்” என தவறாகப் புரிந்து கொண்டு, பள்ளி மேடையிலேயே பாஜகவை வாய்க்கு வந்தபடி நீங்கள் வசைபாடியிருப்பது, இந்து மதத்தின் மீதும் பாஜகவின் மீதும் நீங்கள் கொண்டுள்ள அளவுகடந்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. பள்ளிகளில் அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை தெரியாமல், பள்ளி மாணவர்களிடையே இவ்வாறான வெறுப்பு பிரசாரத்தை முன்னெடுத்த உங்கள் அரசியல் மாண்பற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்

காலங்காலமாக இந்திய இராணுவப் படைகளிலும், சீருடைப் பணிகளிலும் மூத்தவர்களை “ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்” என விளிப்பது தான் மரபு. அதுமட்டுமன்றி, பல பத்தாண்டுகளாக இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஒவ்வொரு இந்துக் கடவுளின் பெயரைக் கூறி கோஷங்களை எழுப்புவதும் வழக்கமான ஒன்று தான். எனவே, இங்கு யாரும் எதையும் புதிதாக திணிக்கவில்லை என்பதை தேசிய மாணவர் படைக்கும், சாரணர் படைக்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி மாணவர்களிடையே, தனது அமைச்சர்கள் இதுபோன்ற இந்து மத வெறுப்பு கருத்துக்களை பரப்புவதை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT