தமிழக செய்திகள்

பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT