கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வாக்குப்பதிவு நாள்: பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி

பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 135-B-ன் படி, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரிவு 135-B-ன் முக்கிய விதிமுறைகள்:

1. வணிக வர்த்தக, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்.

2. விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு எந்த ஒரு பணியாளரின் ஊதியத்திலிருந்தும் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது.

3. சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

4. தினக்கூலி / தற்காலிக தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை மற்றும் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

5. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களும் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு தகுதியுடையவர்கள்.

6. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

7. எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று தங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.