சென்னை,
பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் காலை வழங்கப்பட்ட பொங்கல் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், அவர்கள் அவசரமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழக்கம் போல பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்கள் அந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவனின் தட்டில் இருந்த பொங்கலில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது. அதற்குள் உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பதற்றத்துடன் ஆஸ்பத்திரியில் குவிந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த குறிப்பிட்ட மைய சமையல் கூடத்திலிருந்து மற்ற பள்ளிகளுக்கு அனுப்பவிருந்த காலை உணவுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
சமையல் கூடத்தில் இருந்த உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட சமையல் ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.