தமிழக செய்திகள்

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: இனி காலை 6 மணியில் இருந்தே சேவைகள் தொடங்கும் என அறிவிப்பு

23-ம் தேதி முதல், 15 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை: பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையே வழித்தடம் 4-ல் (மஞ்சள் வழித்தடம்) இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில், வழித்தடம் 4-ன் கீழ் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 15 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள 11 உயர்மட்ட ரயில் நிலையங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி முதல் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வழித்தடம் 4-ல் ரயில் சேவை தொடங்கும் நேரம் காலை 6 மணியாக மாற்றப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் இது அமலுக்கு வரும்.இந்த நேர மாற்றம் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதுடன், அதிகாலை நேரத்தில் வடபழனி மற்றும் பூந்தமல்லி நோக்கிச் செல்வோரின் பயணத்தையும் எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி முதல், 15 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும். எனவே, மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT