கோப்பு படம் 
தமிழக செய்திகள்

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை; மோடி, விஜய்க்கு நன்றி- இபிஎஸ்சை தவிர்த்த எஸ்பி வேலுமணி

பூந்தமல்லி -வடபழனி மெட்ரோ சேவை தொடங்கி வைத்தற்காக மோடி, விஜய்க்கு எஸ்பி வேலுமணி நன்றி தெரிவித்துள்ளர்.இந்த திட்டம் அதிமுகவின் சாதனை திட்டம் என்று கூறியுள்ள எஸ்பி வேலுமணி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

இந்தியாவிலேயே ஒரே கட்டத்தில் செயல்படுத்தப்படுகிற மிகப்பெரிய மெட்ரோ ரெயில் திட்டமான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்கள் உள்ளன. அதன் மொத்த நீளம் 118.9 கி.மீ. ஆகும். அதில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

மோடி தொடங்கிவைத்தார்

வட 2-ம் கட்டத்தின் 4-ம் வழித்தடத்தின் மொத்த நீளம் 26.1 கி.மீ.யாகும். இந்த வழித்தடம் மட்டும் ரூ.4,900 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பகுதியில், 14.64 கி.மீ. நீளம் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை -வடபழனி இடையேயான உயர்மட்ட மஞ்சள் வழித்தடத்தில், 11 ரெயில் நிலையங்களில், மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தினை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடி, முதல் அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்பி வேலுமணி கூறியிருப்பதாவது: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை; ஜெயலலிதா கொண்டுவந்த வரலாற்றுச் சாதனைத் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மோடி மற்றும் விஜய்க்கு நன்றி! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்!

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை உருவாக்க, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு, ஆலந்தூர், கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் சேவையை, 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று அவரே தொடங்கிவைத்தார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் (Phase-1) உயர்மட்ட மற்றும் சுரங்க வழித்தடப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு வரும் ரூ. 63,246 கோடி மதிப்பிலான 118.9 கி.மீ. நீள சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம்(Phase-2),அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நிதி ஒப்பந்தங்கள் பெறப்பட்டு, 2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின்கீழ் வழித்தடம் 4-இல் அமைந்துள்ள பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையிலான 14.64 கி.மீ. தூர புதிய மெட்ரோ ரயில் சேவையை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நரேந்திர மோடி, முதல் அமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளனர். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் வாயிலாக, போரூர், ஐய்யப்பந்தாங்கள், பூந்தமல்லி மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்டநாள் போக்குவரத்துச் சுமை கணிசமாகக் குறையும்.

காலத்தின் கட்டாயம்

மேலும், பல்வேறு திட்டங்களையும், கோவையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் துடியலூர், சூலூர் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய ரயில்வே மேம்பாலங்களையும் திறந்து வைத்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுப் பெருமைமிக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் #அஇஅதிமுக அரசின் சாதனை மைல்கல் திட்டமாகும். தலைநகர் சென்னைக்கு இணையாகத் தொழில் வளத்தைக்கொண்டு, மக்கள் தொகைப் பெருக்கத்தைச் சந்தித்து வரும் தமிழ்நாட்டின் முக்கியப் பெருநகரங்களான #கோயம்புத்தூர் மற்றும் #மதுரை மாநகரங்களின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.கழக ஆட்சியின் போதே இவ்விரு மாநகரங்களுக்கும் மெட்ரோ ரயில் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பின்னர் வந்த திமுக ஆட்சியில் சரியான நிர்வாகம் இல்லாததால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போது வெறும் காகித அளவிலேயே கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.

அதிமுகவிற்குள் சலசலப்பு

இனிமேலும் தாமதிக்காமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் துரிதப்படுத்தி, பணிகளை உடனடியாகத் தொடங்கி, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்’என்றார். பூந்தமல்லி-வடபழனி திட்டத்திற்கு தனது ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றிருந்த நிலையில், அமித்ஷா பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ள எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், எஸ்பி வேலுமணியின் இந்த பதிவு அதிமுகவிற்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT