ஆலந்தூர்,
சென்னையில் பிரபல யூடியூபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 26). பிரபல யூடியூபரான இவர் இன்ஸ்டாகிராமில் நிதி முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், மற்றொரு யூடியூபர் பிரபலமான ஜேசன் சாமுவேலுடன் ஆன்லைனில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹரீஷின் வீடியோக்களை விமர்சித்து அவர் பதிவுகளை வெளியிட்டதாகவும், இதனால் ஹரீஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த கானத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, ஹரீஷின் தந்தை கானத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், மற்றொரு யூடியூபர் தனது மகன் குறித்து அவதூறு பரப்பியதுடன், தொடர்ந்து இணையவழி அச்சுறுத்தல்களிலும் ஈடுபட்டதே அவரது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹரிஷ் தற்கொலைக்கு காரணமானவராக கூறப்படும் யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட இன்ஸ்டா இன்புளுயன்சர் ஒன்றரை மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஹரீஷ் உயிரிழப்பதற்கு முன்புபதிவு செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.