கோவை,
கோவை சிவானந்தா பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரி சமையல் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும் நான் கற்றது என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் வெளியிட்டு பொருட்களை விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் விக்னேஷ்வரி கோவை சைபர் கிரைம் போலீசில் திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கரநாயனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் விக்னேஷ்வரி கூறியிருப்ப தாவது:-
யூடியூப்பில் நான் பதிவிடும் வீடியோக்களை திருடி, திருச்செந்தூர் மணிகண்டன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மணிகண்டன் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். மேலும் எனது தொழில் மற்றும் நான் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்தும், என்னை பற்றியும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் பரப்பினார். எனது பெண்மைக்கு பங்கம் விளை விக்கும் வகையில் எனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு அவதூறு பேசி வந்தார்.
கண்டித்த போது எனது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் என்னை இத்துடன் முடித்து விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் திருச்செந்தூர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்தனர். கைதான மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் 16 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. மணிகண்டனை போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்,