சென்னை,
தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் நாளை முதல் தொடக்கம். இது தொடர்பாக, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:-
மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டு பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன. இந்தக் காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு அதிகார பூர்வ செய்தி
அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளை கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளை பயன்படுத்தி, இந்த பணியானது மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
விரிவான, துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கள பணியின்போது, கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலியை பயன்படுத்துவார்கள். இது விரைவான செயலாக்கம், அதிக துல்லியம், தடையற்ற கணக்கெடுப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கும்.
1948-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, புள்ளிவிவர பகுப்பாய்வு, பொதுக்கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும்.
கள செயல்பாடுகளுக்கு முன்னதாக, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய-கணக்கெடுப்பு வசதியானது, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இணையதளம் (se.census.gov.in) வழியாகத் தங்கள் விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ள அவர்கள், வீட்டு பட்டியல் தயாரிப்பு பணியை எளிதாக்குவதற்காக, வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள, தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாக கைவசம் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தாத குடும்பத்தினர் உட்பட அனைத்து குடும்பங்களும், வீட்டுப்பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்புக் களப்பணிகளின் போது உள்ளடக்கப்படுவார்கள்.
இந்த பணியின் போது, களப்பணியாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கி, இந்த முக்கியமான தேசிய பணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.