காளிராஜ் 
தமிழக செய்திகள்

கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொன்ற சுமை தூக்கும் தொழிலாளி

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவரது நண்பர் அயோத்தி, தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து காளிராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட நையாண்டி மற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டங்குளம் தினசரி மார்க்கெட்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நேரத்தில், காளிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் திட்டங்குளம் தினசரி மார்க்கெட் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

வாக்குவாதம்- கொடூரக் கொலை

அப்போது நண்பர்களுக்குள் இயல்பாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை, ஒருகட்டத்தில் கேலி மற்றும் நையாண்டியாக மாறியுள்ளது. காளிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரையொருவர் வம்புக்கு இழுத்து கேலி செய்ததில் திடீரென கடும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவரது நண்பர் அயோத்தி, தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து காளிராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தப்பியோட்டம்

அதிகாலை நேரத்தில் மார்க்கெட் வளாகத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூரத் தாக்குதலில், காளிராஜ் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அயோத்தி உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காளிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அயோத்தியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சம்பவத்தின் போது அங்கு உடனிருந்த மற்ற நபர்களிடமும், மார்க்கெட் பகுதி தொழிலாளர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திட்டங்குளம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT