தமிழக செய்திகள்

முதல் அமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிய வாய்ப்பு- அதிமுக எம்.பி இன்பதுரை

குதிரை பேர விவகாரத்தில் விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிய வாய்ப்புள்ளது என்று இன்பதுரை பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஆதரவை பெற்றது. அதிமுகவில் சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தவெகவுக்கு ஆதரவு அளித்து இருப்பதில் குதிரை பேரம் நடைபெற்று இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிமுக எம்.பி இன்பதுரை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் ஜேஎம்.எம் எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதல்வர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.