தமிழக செய்திகள்

தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் ரெயில்நிலையம் திறக்க வாய்ப்பு

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரெயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம்

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பேருந்துநிலையம் - ரெயில்நிலையம் இடையிலான ஸ்கை வாக் அமைக்கும் பணி நிறைவடையவில்லை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரெயில்நிலையத்தை பராமரிப்பது குறித்து மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பணிகளை முடித்து, நடப்பாண்டில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது தீபாவளிக்கு பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரெயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது.

ஆதம்பாக்கம் ரெயில் நிலையம்

ஆதம்பாக்கம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு உள்ளது. தண்டவாளம் வளைந்து உள்ளதால், ஆதம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே, இதை சரி செய்யும் பணிகளில் ஈடுபட உள்ளோம். இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு, பணி நடைபெற உள்ளது. விரைவில், இந்த ஒரு ரெயில் நிலைய பாதுகாப்பு பணிகளுக்கான சான்றிதழ் பெற்று ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

ஏசி மின்சார ரெயில்

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரெயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சேத்துப்பட்டு நிலையத்தில் நெடுநேரம் நிறுத்தி இயக்கப்படுவதால், பயணிகள் சிரமத்தை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன. லோக்கல் பாஸ்ட் ரயில்களை விரைவு பாதையில் இருந்து மின்சார ரயில் பாதைக்கு மாற்றி இயக்குவதால், இந்த தாமதம் ஏற்படுகிறது. விரைவில், இப்பிரச்சினை சரிசெய்யப்படும்

தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது பாதை

ஆவடி - கும்மிடிப்பூண்டி 3-வது மற்றும் 4-வது பாதை, அரக்கோணம் - செங்கல்பட்டு 2-வது பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு, 4-வது பாதை, வில்லிவாக்கம் - அம்பத்தூர் 5-வது மற்றும் 6-வது பாதைகள் இந்த நான்கு திட்டங்களும் தற்போது வெவ்வேறு ஒப்புதல் மற்றும் டெண்டர் கட்டங்களில் உள்ளன. சில திட்டங்களில் டெண்டர் கோருதல், டெண்டர் இறுதி செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.