மாமல்லபுரம்,
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு 2026-2027-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் இளங்கவின் கலை பட்டப்படிப்பில் மரபு கட்டடக்கலை (B.Tech / Bachelor of Technology in Traditional Architecture), மரபு வண்ணக்கலை BFA/ Bachelor of Fine Arts in Traditional Painting) மற்றும் மரபு சிற்பக்கலை BFA/ Bachelor of Fine Arts in Traditional Sculpture) சுதைச் சிற்பம் (Sudhai Sculpture), கற்சிற்பம் (Stone Sculpture), மரச்சிற்பம் (Wood Sculpture), உலோகச்சிற்பம் (Metal Sculpture)) ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இளைய சமுதாயத்தினர் தமிழகத்தின் தொன்மையான மரபு கட்டடக்கலை மற்றும் மரபு சிற்பக்கலை ஆகியவற்றை கற்று உலகளவில் நமது தமிழகத்தின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலன் மற்றும் வேலை வாய்ப்பு கருதியும், மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் மரபு கட்டடக்கலை (M.Tech), மரபு வண்ணம் (MFA) மற்றும் மரபு சிற்பக்கலை (MFA) (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம்) ஆகிய பிரிவுகளில் இரண்டாண்டுகால முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்புகள் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளன.
இப்படிப்பில் சேர தொடர்புடைய துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். சேருவதற்கான உயர் வயது வரம்பு இல்லை. மேற்காண் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு தகுதி வாய்ந்த மாணவர்கள் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in இணையதள முகவரியில் அக். 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இம்முதுகலைப்பட்ட படிப்பிற்கான இதர விவரங்களை மேற்காண் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.