தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில், காலை 7.10 மணியளவில் அருணாசலத்தின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. 3 மாவட்ட சிறப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடந்து பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து குற்றவியல் நீதிமன்ற நடுவரின் விசாரணைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது மகன் கொடுத்த வாக்குமூலத்தின்படி 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மது விற்பனை
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் அருணாச்சலம் (வயது 24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தனிப்பிரிவு போலீசார் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 120 மதுப்பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அருணாச்சலத்தை போலீஸ் நிலைய 'லாக் - அப்'பில் அடைத்து வைத்து இருந்தனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருணாச்சலத்தை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் அவரது குடும்பத்தினர் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அருணாச்சலம் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து அருணாச்சலத்தை அவரது பெற்றோர் அழைத்துச்சென்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை உடனடியாக போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே திரண்டனர். அருணாச்சலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, இறப்பதற்கு முன்பு தன்னை 4 போலீசார் தாக்கியதாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது.
இதனைக்கண்ட குடும்பத்தினர், போலீசார் தாக்கியதில் தான் அருணாச்சலம் இறந்துவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட போலீ சார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறையாக விசாரணை நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற உடலை உடனே மருத்துவமனைக்கு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மீண்டும் பிணவறைக்கு கொண்டுவர போலீசார் சம்மதித்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருணாச் லத்தின் உடல் மீண்டும் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.