போடிப்பட்டி,
கோழித்தீவன உற்பத்தியால் மக்காச்சோளத்துக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய அளவில் முக்கிய விவசாயப்பயிராக மக்காச்சோளம் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம் மாநிலங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 65 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு சுமார் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கராக உள்ளது. தமிழ்நாட்டின் தேவையில் 50 சதவீத அளவுக்கே சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ள மக்காச்சோளத்துக்கு சமீப காலங்களாக மவுசு அதிகரித்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில், எத்தனால் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது.
எளிதில் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பிலும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர வழக்கமான பயன்பாடுகளிலும் மக்காச்சோளம் உள்ளது. இதனால் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்து, விலை ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 700 க்கு மேல் விற்பனையாகிறது.
பருவமழை கைவிட்டதால், வரும் காலங்களில் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு போதுமான அளவில் இருப்பவர்கள் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும் அறுவடை செய்த மக்காச்சோளத்தை இருப்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் வெளிமாநில வரத்து எந்த அளவுக்கு இருக்கும் என்ற கணக்கீடுகளைப் பெற்று வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்கினால் விலை சரிவால் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். தற்போது நிலவி வரும் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், படைப்புழுக்களிடமிருந்து பாதுகாக்க அதிக அளவில் மருந்து தெளிக்க வேண்டியது உள்ளது. மேலும் உரம், கூலி என அனைத்து செலவினங்களும் உயர்ந்துள்ளன. இதனால் மக்காச்சோள சாகுபடி அதிக செலவுபிடிக்கும் விஷயமாக மாறி விட்டது. மக்காச்சோளத்துக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தும், அதைவிடக் குறைவாகவே கொள்முதல் செய்து வந்தனர்.
தற்போதுதான் விலை உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆதார விலையைவிட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலை வரக்கூடாது. விலை குறைவு ஏற்பட்டால் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனர்.