தமிழக செய்திகள்

பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரெயில்

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரத்தில் இருந்து ஜூன் 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.

மெமு ரெயில் நிறுத்தங்கள்:

8 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு மெமு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பலபட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.