நெல்லை,
நீர்மட்டம் குறைந்ததால் சேர்வலாறு அணையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணை மூலமாக தென்மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுவது மட்டுமின்றி மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
அதாவது, இந்த 2 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பாபநாசம் லோயர் கேம்ப் எனப்படும் கீழணை வழியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த லோயர் கேம்ப்பில் ஒரு விசையாழிக்கு அதிகபட்சமாக 8 மெகாவாட் என 4 விசையாழிகள் மூலம் அதிகபட்சமாக 32 மெகாவாட் மின் உற்பத்தியும், சேர்வலாறு அணையில் உள்ள நீர்மின் நிலையம் மூலமாக 20 மெகாவாட் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளில் மழை பெய்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து மிகவும் குறைந்து உள்ளதால் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது. மேலும் தற்போது நீர்மட்டம் 42.60 அடியாக உள்ள பாபநாசம் அணையில் இருந்து விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 375 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் லோயர் கேம்ப் நீர்மின் நிலையத்தில் 4 விசையாழிகளில் ஒரு விசையாழி மட்டுமே இயக்கப்பட்டு அழுத்தத்தை பொறுத்து 7 முதல் 8 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதேநேரத்தில் 156 அடி முழுகொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் தற்போது 55.71 அடி மட்டுமே உள்ளது. ஆனால் இங்கு நீர்மட்டம் 60 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். இதன் காரணமாக சேர்வலாறு அணையில் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.