சென்னை:
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்தடையைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புது வண்ணாரப்பேட்டை பொன்னுசாமி தெரு, செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால், 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மின்தடையைக் கண்டித்தும், உடனடியாக மின்சாரம் வழங்கக் கோரியும் வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து மின்தடை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.