சென்னை,
நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டக்தை உறுதி செய்தார்.
இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.