சென்னை,
அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18-ந்தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் த.வெ.க. தனி பெரும் கட்சியாக உள்ளது.
எனவே தமிழ்நாட்டில் இருந்து த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதுவும் வேறு எந்த கட்சியிலிருந்தாவது வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் நடக்கும். அதுவும் இல்லை என்றால், த.வெ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அப்பதவி காங்கிரசுக்கு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.